நடிகர் திலகத்தின் பிறந்த நாள் விழா நிகழ்ச்சிகள் நடிகர் திலகத்தின் 81-வது பிறந்த நாள் விழா சிவாஜி பிரபு அறக்கட்டளை சார்பில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் அரங்கில் [நேற்று] அக்டோபர் 1 அன்று நடைபெற்றது. அந்த விழா துளிகளில் சில. நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய திரு. மோகன்ராம் முதலில் வந்து இறை வணக்கம் என்று சொன்னவுடன் எழுந்து நின்ற அனைவருக்கும் ஒரு இன்ப அதிர்ச்சியாக மேடையின் இருபுறம் வைக்கப்பட்டிருந்த பெரிய திரைகள் வெளிச்சம் பெற நடிகர் திலகம் திரையில் தோன்றி பித்தா பிறை சூடி என்ற பாடல் பாட [திருவருட்செல்வர் படத்தில் இடம் பெற்ற] விழா இனிதே துவங்கியது.
தனது முன்னுரையில் மோகன்ராம் நடிகர் திலகத்தைப் பற்றிய ஒரு உரைநடை செய்யுளை வாசித்தார். முதல் பாதியில் நடிகர் திலகத்தின் குண நலன்களை சொன்ன அந்த படைப்பு ["அரசியல் கட்சி தந்த காசு அல்ல, அந்த கட்சி தந்த அதிகார காசு அல்ல, அதிகாரம் மூலம் செய்த ஊழல் காசு அல்ல உன் உழைப்பினால் வந்த காசை வலது கை கொடுப்பதை இடது கைக்கு தெரியாமல் கொடுத்தவன் நீ" என்ற வரிகளுக்கு அரங்கம் ஆர்ப்பரித்தது]. அதன் இரண்டாம் பாதி இதுவரை அறக்கட்டளை மூலம் கௌரவிக்கப்பட்டவர்களை அவரவர்களின் சிறப்புகளோடு [(உ.ம்) இறுதிவரை நிறம் மாறாமல் நிழல் போல் இருந்த வி.கே.ஆர்] பட்டியலிட்டது. இதை தயாராக்கியது நடிகர் திலகத்தின் தீவிர ரசிகரான திரு.கணேசன் [கட்டபொம்மன் விழாவிலும் இவர் கவிதை இடம் பெற்றது]. வரவேற்புரையாற்ற வந்தார் ராம்குமார். இந்த பிறந்த நாள் விழாவைப் பற்றியும் இந்த அறக்கட்டளை மூலம் செய்யப்படும் நலத்திட்டங்களை பற்றியும் சொல்ல ஆரம்பித்தவர் அதன் ஆரம்பம் என்னவென்பதை சொன்னார். கலையுலக முன்னோடிகளுக்கு நினைவு தபால்தலை, தபால் உறை வெளியிடுதல் என்பது நடிகர் திலகம் இருக்கும் போதே தொடங்கிவிட்ட போதிலும் அவர் இறந்த பிறகு அதை பெரிய அளவில் செய்ய சொன்னதே மங்கேஷ்கர் சகோதரிகள்தான் என்றார். லதா அவர்களும் ஆஷா அவர்களும் அவர்கள் தந்தையார் ஹிருதயநாத் மங்கேஷ்கர் மேல் மிகுந்த அன்பு உடையவர்கள். அவர் மறைந்து போன போது அவர் நினைவாக ஒரு அறக்கட்டளை ஏற்படுத்தி கலையுலகை சேர்ந்தவர்களுக்கும் மற்றவர்களுக்கும் உதவிகள் செய்வதை சொன்னதோடு மட்டுமல்லாமல் தங்களையும் அப்படி செய்ய சொன்னார்கள் என்பதை நினைவு கூர்ந்தார் ராம்குமார். அனைவரையும் அவர் வரவேற்று முடிக்க விருது வழங்கும் நிகழ்ச்சி ஆரம்பமானது.
முதலில் ஒப்பனைக் கலைஞர் முத்தப்பா அவர்கள் ஆதரிக்கப்பட்டார். பராசக்தி படத்திற்காக நடிகர் திலகத்திற்கு மேக்கப் டெஸ்ட் எடுத்தவர் இந்த முத்தப்பா. அன்று தொடங்கிய அந்த உறவு இன்றும் நீடிக்கிறது என்றார் மோகன்ராம். பராசக்தி படத்திலிருந்து நடிகர் திலகம் தன் தங்கையின் முன்னாள் நின்று நந்தவனத்தில் ஒரு ஆண்டி பாடுவதிலிருந்து கிறுக்கண்ணா என்று ஸ்ரீரஞ்சனி சொல்லுவது வரை அந்த கிளிப்பிங் நீண்டது. பிறகு அந்த நாள் படத்தில் நடிகர் திலகத்திடம் other woman பூங்காவில் வைத்து பேசும் காட்சியும் காண்பிக்கப்பட்டது. முத்தப்பா அவர்களுக்கு விருதை, விழா தலைமை விருந்தினரும் தமிழக தலைமை வழக்கறிஞருமான திரு. பி.எஸ்.ராமன் எனப்படும் பரத்ராம் [நடிகர், நமது ஹப்பர் மோகன்ராம் அவர்களின் இளைய சகோதரர்] வழங்கினார்.
அடுத்தவர் என சொல்லிவிட்டு விளக்குகள் அணையை திரை ஒளிபெற்றது. அங்கே அத்தான் என்னத்தான் என்று சாவித்திரி வாயசைப்பில் சுசீலாவின் தேன் குரல் ஒலித்தது. பல்லவி முடிந்தவுடன் மோகன்ராம் ஒரு அரிய தகவலை சொன்னார். பாவ மன்னிப்பு வெளி வந்து ஓடிக் கொண்டிருக்கும் போது லதாவும் ஆஷாவும் அன்னை இல்லத்திற்கு வந்திருக்கிறார்கள். இந்த பாடலை ஒலிக்க விட்ட நடிகர் திலகம் இது போல் உங்களால் பாட முடியுமா என்று சவால் விடுத்தாராம். இதை சொல்லி விட்டு அந்த பாடலை பற்றி ஆஷா அவர்களே புகழ்ந்து பேசி பாடிக் காண்பிக்கும் வீடியோ காட்சியும் திரையிடப்பட்டது. தொடர்ந்து சொல்ல சொல்ல இனிக்குதடா பாடல் திரையில் வந்தது. அதை தொடர்ந்து மலர்ந்தும் மலராத ஒளிப்பரப்பாக அரங்கமே கைதட்டல்களால் அதிர, இதை பார்த்துவிட்டு கண்ணீர் சிந்தாதவர்கள் உண்டோ என்று மோகன்ராம் கேள்வி எழுப்ப பலத்த குரலில் சபை அதை ஆமோதிக்க நீண்ட கைத்தட்டல்களுக்கிடையே சுசீலா விருது பெற்றார்.
அடுத்து சிவாஜி மன்றத்தின் சார்பில் விருது பெற்றவர்களுக்கும் மோகன்ராம் அவர்களுக்கும், கிளிப்பிங்க்ஸ் தொகுத்து வழங்கிய இயக்குனர் பரத் [ஆனந்தக் கண்ணீர் படத்தின் வசனகர்த்தா மட்டுமல்ல நடிகர் திலகம் நடித்த ஒரே தொலைக்காட்சி தொடரான மீண்டும் கெளரவம் தொடரை இயக்கியவர். இப்போது ஜெயா டி.வியில் திரும்பி பார்க்கிறேன் தொடரை இயக்கிக் கொண்டிருக்கிறார்] அவர்களுக்கும் கிரி ஷண்முகம் அவர்களுக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டன.
அடுத்து வந்தவர் பி.பி.ஸ்ரீநிவாஸ் அவர்கள். இவர் நடிகர் திலகம் படங்களில் நிறைய பாடியிருக்கிறார் ஆனால் நடிகர் திலகத்திற்காக பாடியது இரண்டு பாடல்கள் மட்டுமே. நான் சொல்லும் ரகசியம் படத்திலிருந்து கண்டேனே உன்னைக் கண்ணாலே பாடலும் புனர் ஜென்மம் படத்திலிருந்து என்றும் துன்பமில்லை பாடலும் திரையிடப்பட்டது. தொடர்ந்து பி.பி.எஸ் விருது பெற்றார். அடுத்து பாடும் நிலா. இவரைப் பற்றி நான் சொல்லுவதற்கு என்ன இருக்கிறது என்று சொன்ன மோகன்ராம் சங்கராபரணம் படத்தில் வரும் பாடல்களை தன்னால் பாட முடியாது என்று எஸ்.பி.பி., கே.வி.மகாதேவனிடம் சொன்னதையும், மகாதேவன் அவரை வற்புறுத்தி பாட வைத்ததையும் அதன் மூலமாக கே.வி.எம். அவர்களுக்கு இரண்டாவது முறையாக தேசிய விருது கிடைத்ததையும் சொன்னார். தொடர்ந்து நடிகர் திலகத்திற்காக எஸ்.பி.பி பாடிய பாடல் காட்சிகள் என்று அறிவிக்க அரங்கமே நிமிர்ந்து உட்கார்ந்தது, என்ன பாடல் காட்சி வரும் என்று எதிர்ப்பார்ப்பில். ஒரு சின்ன இடைவெளி முடிய, திரை உயிர் பெற, நீல கால் சராயும் கட்டம் போட்ட அரைக்கை சட்டையும் அணிந்து நடிகர் திலகம் இளமை பொங்க நின்று "மலை தோட்ட பூவில்" என்று தொடங்க, காதடைக்கும் ஆரவாரத்தோடு அரங்கம் அதை ரசித்தது. தொடர்ந்து "இரண்டில் ஒன்று" வர ஆரவாரம் அதிகமானது.[அண்ணா அறிவாலயத்தில் அண்ணா தி.மு.க. தலைவியின் பாடல் காட்சி ஒளிப்பரப்பிய சாதனையை செய்யவும் நடிகர் திலகத்தால் மட்டுமே முடியும்.] சந்திப்பு படத்திலிருந்து உன்னை தான் நம்பிட்டேன் பாடலும் சோலாப்பூர் ராஜா பாடல் காட்சியும் திரையிடப்பட்டன.
பிறகு எஸ்,பி,பி. விருது பெற்றார்.
இதன் பிறகு வேட்டைக்காரன்புதூர் முத்துமாணிக்கம் நடிகர் திலகத்துடன் வேட்டைக்கு சென்ற அனுபவங்களை பற்றி எழுதியுள்ள "வேட்டைக்கு வந்த சிங்கம்" என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. அதை திரு.பரத்ராம் அவர்கள் பெற்றுக் கொண்டார். அதற்கு பின் முத்துமாணிக்கம் பேச அழைக்கப்பட மைக் முன் வந்தார் அவர். எளிய பேச்சு தமிழில் அமைந்திருந்த அவரது உரை சற்றே உணர்ச்சிவசப்பட்ட நிலையில் அமைந்தது. 1954 முதல் தொடங்கிய நட்பைப் பற்றி சொல்லும்போது அது வெளிப்பட்டது. வெளிநாடு சென்ற நம்மூர் இளைஞன் சொந்த ஊரை நினைத்து ஏங்குவது போல தன் அருமை நண்பரை அனுதினமும் நினைத்துக் கொண்டிருப்பதாக சொன்னார். Nostalgia என்று சொல்லிவிட்டு அந்த நட்பு தலைமுறை தலைமுறையாக தொடர வேண்டும் என்ற காரணத்தினாலேயே வேறு வேறு சமூகங்களை சேர்ந்த தங்களிருவரும் சம்பந்திகளானோம் என்றார். தனது தம்பி மகளை சிவாஜியின் தம்பி மகனுக்கு [கிரி ஷண்முகம்] கல்யாணம் செய்துக் கொடுத்திருப்பதை குறிப்பிட்ட அவர், எங்கள் நட்பை பற்றி எழுதுவதற்கு ஒரு புத்தகம் போதாது ஆனாலும் அவரது வேட்டை அனுபவங்களை இது வரை யாரும் ஒரு புத்தக வடிவில் வெளிக் கொண்டு வரவில்லை என்ற காரணத்தால் இதை எழுதியதாக சொல்லி தன் உரையை முடித்துக் கொண்டார்.
ஆண்டு தோறும் ஒரு கல்வி கூடத்தை தேர்ந்தெடுத்து அவர்களின் முயற்சியை ஊக்குவிக்கும் வண்ணமாக பொருளாதர உதவி செய்வதை வழக்கமாக கொண்டுள்ள இந்த அறக்கட்டளை இந்த வருடம் அதற்காக தெரிவு செய்தது போக்கஸ் அகாடமி [Focus Academy] என்ற பயிற்சி நிறுவனத்தை. சென்னை அண்ணா நகரில் அமைந்திருக்கும் இந்த நிறுவனம், இந்திய ஆட்சி பயிற்சி மற்றும் இந்திய காவல்துறை பயிற்சியில் சேருவதற்காக நடத்தப்படும் நுழைவு தேர்வுகளுக்கு மாணவர்களை தயார் செய்கிறது. அந்த நிறுவனத்திற்கு ரூபாய் இரண்டு லட்சம் நன்கொடையை அறக்கட்டளையின் சார்பாக ராம்குமாரும் பிரபுவும் வழங்க அந்நிறுவனத்தின் நிதி நிர்வாக இயக்குனர் திரு.குருமூர்த்தி பெற்றுக் கொண்டார்.
அடுத்து வந்தது திரை இசை திலகம் கே.வி.மகாதேவன் அவர்கள் நினைவு அஞ்சல் உறை வெளியிடும் நிகழ்ச்சி. கே.வி.எம். அவர்கள் பற்றி சொன்ன மோகன்ராம் அவரின் சிறப்பு திறனாக கே.வி.எம்மின் அனைத்து பாடல்களுமே கர்நாடக சங்கீத்தை அடிப்படையாக கொண்டவை என்பதைக் குறிப்பிட்டார். அவரின் இசையமைப்பில் நடிகர் திலகம் நடித்த பாடல் காட்சிகளின் ஒரு தொகுப்பு என்று அறிவித்தவுடன் அரங்கத்தில் மீண்டும் ஆர்ப்பாட்டமானது.
திரை இசை திலகம் இசையில் நடிப்பிசை திலகம் என்று டைட்டில் வர ஆத்தூர் கிச்சடி சம்பா என்று செங்கோடன் பாட ஆரம்பித்தவுடன் தாளத்தோடு தொடங்கிய கைதட்டல் அடுத்து காதல் களிப்பில் நடிகர் திலகம் என்ற தலைப்பில் டாக்டர் ராஜா இரவுக்கும் பகலுக்கும் இனி என்ன வேலை என்று பாடிய போது அதிகமாகி அதிலும் உலகம் நமக்கினி ஆனந்தக் கோலம் என்ற வரிகளின் போது நடிகர் திலகம் இரண்டு காலையும் சற்றே அகற்றி இரண்டு கைகளையும் மேலே தூக்கி தோள்களை குலுக்கிய போது பாடலின் சத்தத்தை விட இங்கே ஆரவாரம். அடுத்து வந்த ரங்கன் உள்ளதை சொல்வேன் என்று பாடிய போது மீண்டும் ஆரவாரம். அந்த பாடல் வரிகள் நடிகர் திலகத்தின் உண்மையான இயல்பை குறிப்பதாக அமைந்ததால் அதற்கும் அப்ளாஸ். எங்கள் நடையழகனின் ராஜ நடை என்று டைட்டில் வர பொற்றாமரை குளத்தின் பிரகாரத்தில் சிவபெருமான் அந்த கோப நடை நடக்க கூடவே தருமி ஓட்டமும் நடையுமாக வர அரங்கம் அதிர அடுத்து மீனவனாக கடற்கரையில் நடந்த போது டெசிபெல் லெவல் கூடிக்கொண்டே போனது.[நமக்கு ஒரு சின்ன ஆதங்கம் வெற்றிவேல் வீரவேல் நடையையும் எங்கள் தங்க ராஜா நடையையும் உத்தமன் நடையையும் சேர்த்திருந்தால் இன்னும் பிரமாதமாக இருந்திருக்குமே என்று].
அடுத்து களிப்பின் மிகுதியில் நடிகர் திலகம் என்று டைட்டில் திரையில் வரவும் அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்தது போல கட்டழகனாதோர் கற்பனை ராஜ்ஜியம் என்று ஆரம்பித்தவுடன் சேரிலிருந்து எழுந்த மக்கள் கூட்டம் அதில் நான் சக்கரவர்த்தியடா என்ற போது உச்சக்கட்டமாக அலறிய சத்தம் மவுண்ட் ரோட்டில் எதிரொலித்திருக்கும். பொங்கி பாய்ந்த அந்த உணர்ச்சிகளை கட்டுப்படுத்தும் விதமாக பக்தி பரவசமாக நடிகர் திலகம் என்ற தலைப்பில் சித்தம் எல்லாம் எனக்கு சிவமயமே காட்சி வந்தது. சிறிது அடங்கிய உணர்ச்சி வெள்ளம் அடுத்து பறவைகள் பலவிதம் என்று நடிகர் திலகம் கண்ணடிக்க மீண்டும் பொங்கியது. தொடர்ந்து கானகுயிலாய் எங்கள் கலைக்குரிசில் என்று டைட்டில் வர மனதினிலே வரும் காட்சிகள் கோடி அந்த மயக்கத்திலே பாடுதே ஊஞ்சலாடி என்று ரசிகர்களை கிறங்க வைக்க, அடுத்து நவராத்திரியில் ஒரு தசாவதாரம் என்ற டைட்டில். கூத்து மேடை சிங்காரம் சத்யவானாக மாறி அதாகப்பட்டது என்று பேச, தொடர்ந்து தேசபக்தியில் செவாலியே என்று டைட்டில் வர, வீரம் உண்டு தோள்கள் உண்டு வெற்றி கொள்ளும் ஞானம் உண்டு என்று பாரதமாதாவின் முன் பணிந்து நடிகர் திலகம் "இரத்த திலகம்" இட்டுக் கொள்ள, "ஆடை அணிகலன் ஆடம்பரங்கள் ஆண்டவன் விரும்புவதில்லை" என்று வித்யாபதி கோவிலில் சரஸ்வதி சன்னதிக்கு முன் நின்று பாட, நாதஸ்வர சக்கரவர்த்தி சிக்கலாராக நடிப்புலக சக்கரவர்த்தி தில்லானா வாசிப்பதோடு அந்த இசைப் பயணம் நிறைவுற்றது. உணர்ச்சி களிப்பில் இருந்த ரசிகர்கள் ஒன்ஸ் மோர் கேட்டுக் கொண்டேயிருந்தனர். வாழ்க கோஷங்கள் ஒலித்துக் கொண்டேயிருந்தன.
கே.வி.எம்மின் அஞ்சல் உறையை தமிழக அஞ்சல் துறை தலைவர் திரு த.மூர்த்தி வெளியிட மாமாவின் மைந்தன் திரு கண்ணன் அதை பெற்றுக் கொண்டார். அடுத்து பேச வந்தார் திரு. மூர்த்தி. பொதுவாகவே இப்படி ஒரு உணர்ச்சி குவியலான நிகழ்ச்சிக்கு பிறகு யார் பேசினாலும் அதை ஆழ்ந்து கவனிக்கும் நிலையில் கூட்டம் இருக்காது. அதை புரிந்துக் கொண்ட அஞ்சல் துறை தலைவர் அஞ்சல் துறை எப்படி சமூகத்தின் பல்வேறு துறைகளில் புகழ் பெற்ற மனிதர்களுக்கு மரியாதை செய்கிறது என்பதை சுருக்கமாக எடுத்துரைத்தார். கூடியிருந்த மக்களின் மனோநிலையை அவர் நன்றாக உணர்ந்திருந்தார் என்பதற்கு மற்றுமொரு உதாரணம் அஞ்சல் தலைகள் யார் யாருக்கு வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை சொல்லும் போது ராமச்சந்திரன் என்று கூறி [சட்டென்று யாரும் புரிந்துக் கொள்ள முடியாத வகையில்] அடுத்த பெயருக்கு சென்று விட்டார். அவரின் உரையில் வெளிப்பட்ட ஒரு செய்தி அவர் பள்ளியில் படிக்கும் காலத்தில், தமிழாசிரியர்கள் நடிகர் திலகத்தின் வசனங்களை படித்து பார்த்து தமிழ் உச்சரிப்பை சரி செய்ய சொல்லுவார்களாம்.
மேடையில் அனைவரின் கவனத்தையும் கவரும் வகையில் காவி உடை அணிந்து அமர்ந்திருந்த அறிவொளி என்ற ஆன்மீகவாதி அடுத்து பேச வந்தார். நடிப்பின் இமயத்திற்கு நடக்கும் விழாவில் இந்த சாமியாருக்கு என்ன சம்பந்தம் என்று நினைக்கலாம். எனக்கும் அதே சந்தேகம்தான் என்று பேச்சை தொடங்கியவர் ஒரு வேளை இமயத்தில் அமைந்திருக்கும் கைலாசத்தை வணங்குபவன் என்ற முறையில் என்னை அழைத்திருக்கலாம் என்று நினைக்கிறேன் என்று ஒரு விளக்கமும் கொடுத்தார். ஆனால் சினிமா பற்றி பெரிதும் தெரிந்தவர் என்பது அவர் பேச்சில் வெளிப்பட்டது. 3500 ஆண்டுகளுக்கு முன் தமிழில் சைத்தியம் என்ற புத்தகம் இருந்ததாக குறிப்பிட அவர்,அதில் நடிப்புக் கலையின் நவரசங்களையும் பற்றிய குறிப்புகள் எழுதப்பட்டிருப்பதாக சொன்னார். ஆனால் அந்த புத்தகத்தை சிவாஜி படித்திருக்க முடியாது என்றார். ஆனால் நீங்கள் புத்தகத்தை படித்து விட்டு சிவாஜி நடிப்பை பார்த்தால் இரண்டும் ஒன்றாகவே இருக்கும் என்றார். அன்னையின் ஆணை படத்தின் முக்கியமான காட்சியான சாவித்திரி சிவாஜியை அடித்து பனியனை கிழித்து விடும் காட்சியை விவரித்த அவர், நடிகர் திலகம் அமைதியாக காயங்களை கழுவிக் கொண்டு வந்து டர்க்கி டவலால் சாவித்திரியை விளாசும் காட்சியை ரசித்து சொன்னதை கூட்டம் ஆரவாரத்தோடு வரவேற்றது.
கட்டபொம்மன் நாடக விழாவில் அண்ணா கலந்து கொண்டு மொட்டு விடும் போதே கணேசனை எனக்கு தெரியும். அவர் எங்கிருந்தாலும் வாழ்க என்று வாழ்த்தியதையும் நினைவு கூர்ந்தார். கலைஞரின் வசனங்கள் சற்று கடினமானவை என்பதை சொன்ன அறிவொளி ஆனால் அதை பட்டி தொட்டியெங்கும் கொண்டு சென்றவர் நடிகர் திலகம் என்றார். கலைஞரின் வசனங்களை பேசியதால் சிவாஜிக்கு சிறப்பா [கூட்டம் அமைதி காத்தது] இல்லை சிவாஜி பேசியதால் கலைஞரின் வசனங்கள் சிறப்பு பெற்றதா [பலத்த கைதட்டல் - நிறுத்தும்படி ராமும் பிரபுவும் சைகை செய்கிறார்கள்] என்று ஒரு பட்டி மன்றம் வைத்தால் அதற்கு கலைஞரே நடுவராக இருந்தால் கணேசன் பேசியதால்தான் என் வசனங்கள் சிறப்பு பெற்றன என்று தீர்ப்பு சொல்லியிருப்பார் என்று அறிவொளி அவர்கள் சொன்னபோது பயங்கர கைதட்டல். [அண்ணா அறிவாலயத்தில், கலைஞர் அரங்கில் கணேசனால்தான் கருணாநிதியின் வசனங்கள் புகழ் பெற்றன என்று பதிவு செய்யும் சாதனையை நடிகர் திலகத்தை தவிர வேறு யாரால் செய்ய முடியும்?]. வாய்ப்பளித்த நடிகர் திலகத்தின் பிள்ளைகளை வாழ்த்தி விடைப் பெற்றார் திரு.அறிவொளி.
இறுதியாக பேச வந்தார் முக்கிய விருந்தினர் திரு.பரத்ராம். தமிழில்தான் பேசப் போகிறேன் என்று சொன்ன அவர் திரு அறிவொளிக்கு பிறகு தன்னை பேச அழைத்ததற்கு செல்லமாக கோபித்துக் கொண்டார். [சச்சின் செஞ்சுரி அடித்ததற்கு பின் அடுத்த பாட்ஸ்மான் விளையாடுவதை யாரவது பார்ப்பார்களா?] ராம்குமார் தன்னை தொலைபேசியில் அழைத்து நேரில் வருவதாக சொன்னவுடன் தான் வேறு ஏதோ விஷயம் என்று நினைத்ததாகவும், விழாவிற்கு தலைமை என்பதை கேட்டவுடன் அதுவும் லதா மங்கேஷ்கர் வர வேண்டிய இடத்தில் என்று கேட்டதும் வார்த்தை வராமல் நின்று போனதாகவும் சொன்னார். தன்னை எதற்கு தேர்ந்தெடுத்தார்கள் என்று யோசித்ததாகவும் பின் தன் தந்தையார் திரு வி.பி.ராமன் அவர்களும் நடிகர் திலகமும் கொண்டிருந்த நாற்பதாண்டு கால நட்புக்கு மரியாதை செலுத்தும் விதமாக தன்னை அழைத்திருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டேன் என்றார். உயர்ந்த மனிதன் படப்பிடிப்பின் போது கொடைக்கானலில் உள்ள தங்கள் வீட்டில் ஒரு மாத காலமும் மாலையில் ஷூட்டிங் முடிந்தவுடன் நடிகர் திலகம் தங்கள் வீட்டிற்கு வந்ததை பெருமையுடன் சொன்னார். அது போல தங்கள் தந்தை காலமான போது காலையில் தங்கள் வீட்டிற்கு வந்த நடிகர் திலகம் மாலை வரை இருந்ததையும், சகோதர்களான தங்கள் மூன்று பேரையும் அருகில் அழைத்து கொடைக்கானல் நினைவுகளை பங்கிடும் விதமாக அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே என்று பாடியதையும் உணர்ச்சிபூர்வமாக நினைவு கூர்ந்தார். அன்னை இல்லத்தோடு இன்றும் அந்த நட்பு தொடர்வதாகவும் அது என்றென்றும் தொடரும் என்றார். இன்று விருது பெற்ற அனைவருக்கும் தான் ரசிகன் என்று குறிப்பிட்ட அவர், தனக்கு கிடைத்த ஒரு நல்ல மேடையாக இந்த நிகழ்ச்சியை குறிப்பிட்டு விடை பெற்றார்.
விருது பெற்றவர்களின் சார்பாக பி.பி.எஸ். வந்ததார். நடிகர் திலகத்தை வாழ்த்தி தான் எழுதிய கவிதையை படித்து காண்பித்த அவர் அதை பிரபுவிற்கு பரிசளித்தார். பிறகு காலங்களில் அவள் வசந்தம் பாடல் மெட்டில் நடிகர் திலகத்தை பற்றிய ஒரு பாடல் பாடினார். சரணத்தின் மூன்றாவது வரியில் பிரமிப்பூட்டுகிறாய் அந்த விண்ணுலகை என்ற வரிக்கு பலத்த கைதட்டல். பாடும் போது சற்று தடுமாறும் இந்த குரல் பேசும் போது இன்னும் அதே கம்பீரம்.
நன்றியுரையாற்ற வந்தார் இளைய திலகம் பிரபு. விருது பெற்ற ஒவ்வொருவரையும் தனி தனியே பாராட்டினார். முத்தப்பாவிற்கும் சிவாஜிக்கும் இடையே நிலவிய நட்பை சிலாகித்து சொன்னார். ஏ.வி.எம்மில் பணியாற்றிய முத்தப்பா எப்படி ஏ.வி.எம். செட்டியார் கேட்டுக் கொண்டதின் பேரில் நடிகர் திலகத்தோடு பேசி உயர்ந்த மனிதன் படத்தில் நடிக்க சம்மதம் வாங்கினார் என்று குறிப்பிட்ட பிரபு அவரை சிவாஜி வெள்ளை என்றுதான் அழைப்பார் என்றார்.[ஆள் நல்ல கருப்பு நிறம்].
நன்றியுரையாற்ற வந்தார் இளைய திலகம் பிரபு. விருது பெற்ற ஒவ்வொருவரையும் தனி தனியே பாராட்டினார். முத்தப்பாவிற்கும் சிவாஜிக்கும் இடையே நிலவிய நட்பை சிலாகித்து சொன்னார். ஏ.வி.எம்மில் பணியாற்றிய முத்தப்பா எப்படி ஏ.வி.எம். செட்டியார் கேட்டுக் கொண்டதின் பேரில் நடிகர் திலகத்தோடு பேசி உயர்ந்த மனிதன் படத்தில் நடிக்க சம்மதம் வாங்கினார் என்று குறிப்பிட்ட பிரபு அவரை சிவாஜி வெள்ளை என்றுதான் அழைப்பார் என்றார்.[ஆள் நல்ல கருப்பு நிறம்].
சுசீலாவின் குரல் என்றால் அப்பாவிற்கு மிகவும் பிடிக்கும் என்று சொன்ன அவர் மேடையில் முன்பே சொல்லப்பட்ட லதா ஆஷா சகோதரிகளிடம் சிவாஜி சவால் விட்டதை மறுபடியும் சொன்ன பிரபு படித்தால் மட்டும் போதுமா பாடல் கம்போசிங்கின் போது சிவாஜி அங்கு இருந்ததையும் தன்னிலவு தேனிறைக்க பாடலின் ஆரம்ப மெட்டு சிவாஜி சொன்னது என்றும் சொன்ன பிரபு அந்த பாடலை சுசீலாதான் பாட வேண்டும் என்று பீம்சிங்கிடம் உறுதிபட சொன்னதை கூறினார்.சுசீலாவைப் பார்த்து உங்களுக்கு விருதளிப்பதில் எங்களுக்கு பெருமை என்றார்.
பி.பி.எஸ். அப்பாவிற்கு ரொம்ப பிடித்தவர் என்று சொன்ன பிரபு, அப்பா எப்போதும் முணுமுணுக்கும் பாட்டு என்று பொன் என்பேன் சிறு பூவென்பேன் பாடலை குறிப்பிட்டார். கமலா அம்மாளை பார்த்து இந்த பாடலை பாடுவார் என்ற சுவையான செய்தியை சொன்ன பிரபு பி.பி.எஸ்ஸின் கல்யாணத்திற்கு தம்பதி சமேதராக சிவாஜி சென்று வாழ்த்தியதையும் சொன்னார். பி.பி.எஸ் அவர்களுடன் நடிகர் திலகம் கன்னடத்தில்தான் உரையாடுவார் என்ற உபரி தகவலையும் வெளியிட்டார்.
எஸ்.பி.பியை பற்றி சொல்ல வேண்டுமென்றால் நேரம் போதாது என்று சொன்ன பிரபு ஆயிரம் நிலவே வா பாடலை கேட்டு விட்டு பாலுவை தன் படத்தில் பாட வைக்க வேண்டும் என்று சிவாஜி எம்.எஸ்.வியிடம் சொன்னதை சொன்னார். அன்னை இல்லத்தின் ஒரு பிள்ளையாகவே பாலுவை பார்ப்பதாகவும், திரையுலகில் எப்படி ஒரு நடிகர் திலகம், ஒரு மக்கள் திலகம், ஒரு கலைஞர், ஒரு சூப்பர் ஸ்டார், ஒரு கலை ஞானி மட்டும்தான் இருக்கிறார்களோ அது போல ஒரு பாலு தான் என்றார்.
முத்துமாணிக்கம் பற்றி சொன்ன பிரபு அவரை பெரியப்பா என்றுதான் அழைத்திருந்ததாகவும் பிறகு தன் தம்பி அவரது தம்பி மகளை திருமணம் செய்துக் கொண்டதால் மாமனார் அந்தஸ்திற்கு போய் விட்டதாகவும் சொன்னார். ஓய்வு இல்லாமல் உழைத்துக் கொண்டிருந்த போது அப்பா ரிலாக்ஸ் செய்வதற்கு செல்லும் இடம் வேட்டைக்காரன் புதூர் என்று பிரபு குறிப்பிட்டார்.
பரத்ராம் தங்கள் குடும்பத்தில் ஒருவர் என்று குறிப்பிட்ட பிரபு அவர் தந்தை ஒரு சிங்கம், இவர் குட்டி சிங்கம் என்றார். தங்கள் குடும்ப நலனில் ராமன் குடும்பத்தின் அக்கறையை சுட்டிக் காட்டிய பிரபு அவர்கள் குடும்பத்திற்கும் நன்மையே வரும் என்றார்.
பரத்ராம் தங்கள் குடும்பத்தில் ஒருவர் என்று குறிப்பிட்ட பிரபு அவர் தந்தை ஒரு சிங்கம், இவர் குட்டி சிங்கம் என்றார். தங்கள் குடும்ப நலனில் ராமன் குடும்பத்தின் அக்கறையை சுட்டிக் காட்டிய பிரபு அவர்கள் குடும்பத்திற்கும் நன்மையே வரும் என்றார்.
இறுதியாக ரசிகர்களை நோக்கி திரும்பிய பிரபு சிவாஜி என்ற ஜீவ காற்றின் ஆக்ஸிஜன் என்று ரசிகர்களை குறிப்பிட்டார். நீங்கள் எங்களோடு இருக்கும் வரை எங்கள் தந்தை எங்களுடன் இருப்பது போன்றே உள்ள உணர்வு கிடைக்கிறது. நீங்கள் எப்போதும் எங்களுக்கு துணையாக இருங்கள் என்று வேண்டிய பிரபு தான் சில நிகழ்ச்சிகளுக்கு ஷூட்டிங் காரணமாக செல்ல முடியவில்லை.அதனால் தன்னை தப்பாக நினைக்க வேண்டாம் என்று கூறினார். அனைவருக்கும் நன்றி கூறி விடை பெற்றார்.
பிரபு பேச்சில் இரண்டு விஷயங்கள். கடந்த நாலைந்து வருடங்களாக பார்த்த பிரபுவின் பேச்சில் இப்போது நல்ல சரளம். தங்கு தடையில்லாமல், எழுதி வைத்து படிக்காமல் நேரிடையாக பேசுகிறார். இரண்டு - மனதிலிருந்து பேசுகிறார். ஆகவே ஆடியன்ஸை அவர் பேச்சு நேரிடையாக பாதிக்கிறது.
இறுதியாக நாட்டுப் பண். இதிலும் புதுமையாக கையில் தேசிய கொடியேந்திய திருப்பூர் குமரனாக நடிகர் திலகம் திரையில் தோன்ற நாட்டுப் பண் ஒலித்தது. ஒருவர் கூட கலைந்து செல்லாமல் அமைதி காக்க விழா இனிதே நிறைவுற்றது.
இறுதியாக நாட்டுப் பண். இதிலும் புதுமையாக கையில் தேசிய கொடியேந்திய திருப்பூர் குமரனாக நடிகர் திலகம் திரையில் தோன்ற நாட்டுப் பண் ஒலித்தது. ஒருவர் கூட கலைந்து செல்லாமல் அமைதி காக்க விழா இனிதே நிறைவுற்றது.