அந்த அழகு மீண்டும் வராது
கடந்த மாதம் இந்தியக் கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர் ஊடகங்களில் தலைப்புச் செய்தியானார். அவர் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக ஆடவிருக்கும் தனது 200ஆவது டெஸ்ட் போட்டியோடு டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக அக்டோபர் 10 அன்று அறிவித்தார். அக்டோபர் முதல் வாரத்தில் முடிந்த சாம்பியன்ஸ் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை வென்றதும் 20-&20 கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார்.
இந்தியா, மேற்கு இந்தியத் தீவுகளுக்கு இடையில் நடக்க இருக்கும் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்குப் பிறகு சச்சின் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதைப் பார்க்க முடியாது. ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகருக்கும் இது வருத்தத்துக்குரிய செய்தி. ஆனால் இது எதிர்பார்க்கப்பட்டதுதான். விளையாட்டு வீரர்களின் தொழில் வாழ்க்கைக்கு ஒரு எல்லை உண்டு. இந்த உண்மையை ஊடகங்கள் கவனிக்கத் தவறிவிட்டன. இது பற்றி அவை வெளியிட்ட செய்திகள் அனைத்தும் இனி இந்திய கிரிக்கெட் என்ன ஆகும், இனி யார் கிரிக்கெட்டைப் பார்ப்பார்கள் என்பது போன்ற அச்ச உணர்வுடன் இருந்தன.
ஏழு ஆண்டுகளுக்கு முன் சச்சின் ஓய்வு பெற்றிருந்தால் நானும் இதே பதற்றத்தை அடைந்திருப்பேன். ஆனால் இப்போது அப்படி இல்லை. அஸ்வின், ரெய்னா, கோலி போன்ற விரர்கள் நம்பிக்கை அளிக்கிறார்கள். தவிர சச்சின் கடந்த 2-,3 ஆண்டுகளாக அவர் விலகவே கூடாது என்று நினைக்கவைக்கும் அளவுக்கு ஆடிவிடவில்லை. கிரிக்கெட் ரசிகர்களுக்கு சச்சினின் ஓய்வு ஒரு இழப்புதான். ஆனால் இந்தியக் கிரிக்கெட்டுக்கு அல்ல.
உண்மையில் அனில் கும்ப்ளே, சவுரவ் கங்குலி, வி.வி.எஸ். லக்ஷ்மண், ராகுல் டிராவிட் என் இந்தியக் கிரிக்கெட்டைத் தாங்கி நின்ற தூண்கள் ஒருவர் பின் ஒருவராக ஓய்வுபெற்றபோதுதான் எனக்குக் கொஞ்சம் பதற்றம் ஏற்பட்டது. இவர்கள் அனைவரும் போனதைப் பெரிதாகக் கண்டுகொள்ளாமல் சச்சின் ஒருவர் விலகும்போது மட்டும் ஊடகங்கள் பரபரப்பாவது சற்று வேடிக்கையாகத்தான் இருக்கிறது.
இவற்றையெல்லாம் சொல்வதால் நான் சச்சினின் பங்களிப்பைக் குறைத்து மதிப்பிடுகிறேன் என்று பொருள் அல்ல. கிரிக்கெட்டுக்கு அவரது பங்களிப்பு அளப்பரியது. அவரைப் பிடிக்காதவர்கள்கூட இதை மறுக்க முடியாது. நான் அவரது ரசிகன். ஷேன் வார்னை அவர் பரேடு எடுத்ததைப் பற்றிக் காவியம் எழுதலாம். சச்சின் என்ற ஒரு மட்டையாளர் இல்லாவிட்டால் ஷேன் வார்ன் அடைந்திருக்கும் புகழ் பன்மடங்காக இருந்திருக்கும். அவரைத் தட்டி வைத்தது சச்சின்தான். மட்டை வீ ச்சில் அவரது ரன் குவிப்பு சாதனைகளின் புள்ளிவிவரங்களை உலகறியும். மட்டைவீச்சின் நுணுக்கங்கள் சார்ந்தும் அவர் பல்வேறு பங்களிப்புகளைச் வழங்கியுள்ளார்.
மிகச் சிறந்த மட்டைவீச்சாளர்கள் அனைவரும் ஒரு பந்தை எதிர்கொள்வதற்கு இரண்டு விதமான வழிகளில் தேர்ச்சி அடைந்திருப்பார்கள். ஆனால் விவியன் ரிச்சர்ட்ஸ், பிரயன் லாரா ஆகியோரைத் தவிர சச்சினுக்கு மட்டும்தான் ஒவ்வொரு பந்தையும் நான்கைந்து வழிகளில் எதிர்கொள்ளத் தெரியும். அவர் கிரிக்கெட்டையே மாற்றினார். மற்றவர்கள் தன்னை நோக்கி வரும் பந்தை முன்னே சென்று லேசாக தட்டினால் (Forward Defensive Stroke) பந்து மிட் ஆஃப் (Mid off) பகுதி வரை போகும். அதையே சச்சின் செய்தால் பந்து எல்லைக் கோட்டைக் கடக்கும். மட்டைவீச்சில் தடுப்பாட்டம் (Defence) என்பதை ரன் எடுப்பதற்கான ஆட்டமாக மாற்றியவர் சச்சின். கிரிக்கெட்டில் தடுப்பே தாக்குதலாக அமையும் (Defence can be an offence) என்று உலகுக்கு நிரூபித்தவர் அவர்.
இந்தப் புதுவகை ஆட்டத்துக்கு ஏற்ற வகையில் மட்டைகளை வடிவமைப்பதில் அவர் கவனம் செலுத்தினார். மட்டை வடிவமைப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களில் அவரது பங்கு இருக்கிறது.
அப்பழுக்கற்ற திறமை, கடின உழைப்பு, தன்னடக்கம், அவருக்குக் கடவுள் வழங்கியிருக்கும் வரமான, கண்ணையும் கையையும் ஒருங்கிணைப்பதற்கான திறன். இவை நான்கும்தான் சச்சினை உலகின் மிகச் சிறந்த மட்டையாளராக்குகின்றன. இவற்று க்கெல்லாம் மேலாக அவர் கடைசி வரை பயிற்சியை நிறுத்தவில்லை. உலகமே போற்றும் வீரராகிவிட்ட பின்னும் தன் விளையாட்டு நுணுக்கங்களைத் தொடர் பரிசீலனைக்கு உட்படுத்திக்கொண்டே இருந்தார். டான் பிராட்னுக்கு மட்டுமே இருந்த இவ்விரு பண்புகள் அவருக்குப் பின் சச்சினிடமே காணக் கிடைக்கின்றன. ஏற்றுக்கொண்ட காரியத்தில் முழுமையான அர்ப்பணிப்புடையவர்கள் மட்டுமே இப்படி இருக்க முடியும்.
சச்சினை ஏற்றுக்கொள்ளாதவர்கள் அவர் மீது வைக்கும் குற்றச்சாட்டுகளைப் பார்ப்போம். அவர் தன் தனிப்பட்ட சாதனைகளுக்காக விளையாடுபவர் என்பார்கள். 1999 உலகக் கோப்பைக்காக இங்கிலாந்தில் இருந்தார். அவரது அப்பா இறந்த செய்தி கிடைத்தது. அதற்குச் சென்று ஓரிரு நாட்களில் திரும்பினார். ஜிம்பாப்வே அணியுடன் நடந்த லீக் போட்டியில் மட்டுமே அவரால் விளையாட முடியவில்லை. தனிப்பட்ட சாதனைக்காக விளையாடுபவர் என்ற £ல் அப்பாவின் மரணத்தைக் காரணம் காட்டிப் பத்து நாட்கள் வீட்டில் இருந்திருப்பார்.
அடுத்ததாக சச்சின் அதிக ரன் அடிக்கும் போட்டிகளில் இந்தியா தோற்றுவிடும் என்பார்கள். இதன் மூலம் இந்திய அணியின் வெற்றிகளுக்கு அவர் அதிகமாகப் பங்களித்ததில்லை என்று நிறுவ முயல்வார்கள். ஆனால் புள்ளிவிவரங்களை நேர்மையாக ஆராய்ந்தால் சச்சின் பல போட்டிகளில் இந்தியாவின் வெற்றிக்குக் காரணமாக இருந்திருக்கிறார் என்பது புலப்படும். அவர் அடித்த ஒவ்வொரு ரன்னும் இந்தியாவுக்கும் தேசத்துக்கும் பெருமை சேர்ப்பதாகவே அமைந்திருக்கின்றன.
லக்ஷ்மண், அனில் கும்ப்ளே ஆகியோரைப் போல அணியைவிட்டு விலக இந்திய கிரிக்கெட் வாரியம் சச்சினை வற்புறுத்தவில்லை. விலகலுக்கான நேரத்தைத் தேர்ந்தெடுக்கும் வசதி அவருக்கு வழங்கப்பட்டது. இதையும் சிலர் பாரபட்சம £ன அணுகுமுறை என்று விமர்சிப்பார்கள். ஆனால் சச்சின் கடைசிவரை இந்த கவுரவத்துக்குத் தகுதியானவராகவே இருந்தார். அவரது கிரிக்கெட் வாழ்வின் கடைசிப் பகுதியில் பெரிய சாதனைகளைப் படைக்கவில்லை, அதிக வெற்றிகளைப் பெற்றுத் தரவில்லை என்று சொல்வதை ஏற்கலாம். ஆனால் எப்போதும் அவர் அணிக்குச் சுமையாக இருக்கவில்லை என்பதையும் ஏற்றுக்கொண்டாக வேண்டும். ஓரளவு ரன் அடித்தார். மற்ற வயதான வீரர்களைப் போல் தடுப்புத் திறனில் சொதப்பவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக அவர் இருக்கிறார் என்பது அணியில் மற்றவர்களுக்குப் பெரும் தெம்பைக் கொடுத்தது. இது அவருக்குக் கடவுள் கொடுத்த வரம். ஒருவன் தன்னால் பத்து இட்லி சாப்பிட முடியும் என்று சொல்லிவிட்டு சாப்பிட்டும் காண்பித்தால் நாம் அதைக் கேள்வி கேட்க முடியுமா. அதுபோல்தான் இதுவும்.
தொழிலில் மட்டுமல்ல; சொந்த வாழ்க்கையிலும் அனைவரும் பின்பற்றத்தக்க குணாதிசயங்களைக் கொண்டிருந்தவர் அவர். எளிமையின் மனித வடிவம் என்று அவரைச் சொல்லலாம். பிசிசிஐ ஏற்பாடு செய்திருந்த ஒரு விழாவுக்கு எனக்கு அழைப்பு கிடைத்தது. சச்சின் வந்திருந்தார். நான் அவருடன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ளும் ஆசையைத் தெரிவித்ததும் உடனடியாக தோளில் கைபோட்டுக் கொண்டு நின்றார், மூன்று நான்கு ஸ்னாப்கள் எடுத்த பிறகு “போதுமா?” என்று புன்னகையுடன் கேட்டுவிட்டு நகர்ந்து சென்றார்.
சச்சினின் ஓய்வுக்கு வழங்கப்பட்ட முக்கியத்துவம் வேறெந்த நட்சத்திர ஆட்டக்காரருக்கும் வழங்கப்படவில்லை. திராவிடின் ஓய்வை மட்டுமே ஒரு நாளைக்காவது தொலைக்காட்சி ஊடகங்கள் விவாதித்தன. ஆனால் சச்சினுக்குக் கிடைத்த இந்த முக்கியத்துவம் ஒரு வகையில் நல்லதுதான். நாளை தோனி ஓய்வுபெறுவார், கோலி ஓய்வுபெறுவார், அஸ்வின் ஓய்வுபெறுவார். அவர்களின் ஓய்வையும் கவுரவப்படுத்த வேண்டும் என்பதற்கு இது ஒரு முன்னுதாரணமாக அமையும்.
நான் சச்சினை எம்.ஜி.ஆருடன் ஒப்பிடுவேன். அவர் எப்படி சினிமாவில் சாதித்துவிட்டு அரசியலிலும் வந்து சாதித்தாரோ அதைப் போல் சச்சினும் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். அந்தச் சாதனை வேறு துறையிலும் இரு க்கலாம். கிரிக்கெட்டிலும் இருக்கலாம். கிரிக்கெட்டுக்கு அவரது தொண்டு, அறிவு, ஆற்றல், அனுபவம் ஆகியவை இன்னும் பயன்பட முடியும். வர்ணணையாளராகவோ, அணி மேலாளராகவோ, பயிற்சியாளராகவோ பிசிசிஐ நிர்வாகிய £கவோ இந்திய கிரிக்கெட்டுக்கான அவரது பங்களிப்பு தொடரும் என்று எதிர்பார்க்கிறேன். தொடரும் என்று நம்புகிறேன். தன் ஓய்வை அறிவிக்கும்போது “லெக் பேடை மட்டும்தான் கழட்டிவைக்கிறேன். கிரிக்கெட்டை விட்டுவிட மாட்டேன்” என்று சொல்லியிருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். விளையாடுவதிலிருந்துதான் ஓய்வுபெற்றிருக்கிறார். கிரிக்கெட்டிலிருந்து அல்ல.
இந்த எண்ணம்தான் சச்சினின் ஓய்வு அறிவிப்பை ‘காலத்தின் கட்டாயம்’ என்று ஏற்றுக்கொள்ள வைத்தது என்று நினைக்கிறேன் சச்சினின் ஓய்வு எனக்கும் வருத்தம் தரக்கூடியதுதான். ஆனால் காரி சோபர்ஸ், சுனில் கவாஸ்கர், ஜி.ஆர்.விஸ்வநாத், பிரசன்னா, பேடி, வெங்கட்ராகவன், கபில்தேவ் ஆகிய ஜாம்பவான்கள் ஓய்வுபெற்றபோது ஏற்பட்ட வருத்தம்தான் இப்போது ஏற்படுகிறது. அதற்குமேல் எதுவும் இல்லை. பட்டோடி போனபின் வடேகர் வந்தார், வடேகர் போனபின் கபில்தேவ், கபில்தேவுக்குப் பின் சச்சின், சச்சினுக்குப் பின் வேறொருவர் வருவார். இவர்கள் ஒவ்வொருவரும் தன க்கேயுரிய பாணியில் பெருமை தேடிக்கொண்டார்கள். இந்திய கிரிக்கெட் சச்சினுடன் நின்றுவிடாது. ஆனால் அது அவருடன் பயணித்தபோது இருந்த அழகு மீண்டும் வராது.
No comments:
Post a Comment